கோத்தகிரி

கோத்தகிரியில் உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு யானை, புலி நடமாட்டம் இருந்து வருகிறது. இங்குள்ள வனப்பகுதிகளை ஒட்டி தனியார் தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் கட்டப்படுவதால், வனவிலங்குகளின் வாழ்விடம் குறைந்து வருவதுடன், அவற்றின் வழித்தடமும் தடுக்கப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்களுக்குள் வருவது வாடிக்கையாகி வருகிறது.

கோத்தகிரி நகரின் மைய பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக  அதிகாலையில் சிறுத்தை உலா வரும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி வருகிறது. நேற்று அதிகாலை அரசு மேல்நிலை பள்ளிக்கு எதிரில் கட்டப்பட்டு உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் 2 முள்ளம்பன்றிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுள்ளதை கண்ட அரசு பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த சிறுத்தை, அங்கிருந்து தாவி குதித்து முள்ளம் பன்றிகளை வேட்டையாட சென்றது.

இதுவும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சமடைந்து உள்ளனர்.

அவர்கள் இதுகுறித்து,

“இப்பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம், தாசில்தார் அலுவலகம், தபால் துறை குடியிருப்புகள், வனத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பு உள்பட காம்பாய் கடை, சேட் லைன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சாலை வழியாக இரவு, அதிகாலை நேரத்தில் சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, பள்ளி வளாகத்தில் உள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றவும், சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ”

என்று தெரிவித்துள்ளனர்.