சென்னை
பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் மக்களிடையே மத மோதல்கள் குறையவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், ஆர்.சுப்ரமணிய பாரதி எழுதி இயக்கியுள்ள ‘ஆனந்த வாழ்க்கை’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். எஸ்கேஎம் மயிலானந்தம் வழிகாட்டுதலின்படி,ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுடன் உலக சமுதாய சேவா சங்கம் இதைத் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் கலந்துகொண்டு
“சொர்க்கம், நரகம் இரண்டும் இங்கே நம்மிடையே தான் இருக்கிறது. இரண்டிற்கும் வாசல் ஒன்றுதான். அது நம் வாய்தான். அதிலிருந்து வரும் வார்த்தைகளைப் பொறுத்துதான் சொர்க்கம், நரகம் இருக்கிறது. மனிதனிடம் சாமியும் இருக்கிறது, சைத்தானும் இருக்கிறது. அதை தவிர்க்க முடியாது. மனிதர்களை சரிசெய்வது என்பது முடியாத காரியம். புத்தரும், கர்த்தரும், நபிகள் நாயகமும் அன்பை போதித்தனர். ஆனாலும் மக்களிடையே மத மோதல்கள் குறையவில்லை.
இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக வேதாந்த மகரிஷியின் மனவளக்கலை பயிற்சி எனக்கு அளிக்கப்பட்டது. என்னில் ஒரு மாற்றம் கண்டேன். இந்த கலை நம் உடலை சுத்தப்படுத்துகிறது. நாம் சீராகி விட்டாலே நம்மை சுற்றி இருப்பவர்களையும் சீர்படுத்த முடியும். நல்லது செய்ய கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்பதல்ல, நம்மை சுற்றியுள்ளவர்களில் ஒரு சிலரையாவது அன்புடன் கவனித்துக்கொண்டாலே போதும். அதுவே நல்ல மாற்றமாக அமையும்'”
என உரையாற்றியுள்ளார்