சென்னை: கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல என முதல்வரின் போலி விவசாயி என்ற விமர்சனத்துக்கு முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பெருந்துறை வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து, உரையாற்றும்போது, நான் தோளில் பச்சை துண்டுபோட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயி அல்ல என்று கூறியதுடன், விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்றார். விவசாயிகளால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று கூறியவர், விவசாயிகளின் விவசாயத்துக்கு மட்டும் தமிழ்நாடு அரசு ரூ.26,232 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறினார்.
முதலமைச்சரின் இந்த பேச்சு விவசாயிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததுடன், விவசாயி யார் என்பது குறித்து பொதுமேடையில் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல, ‘ நீங்கள்தான் போலி விவசாயி. நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா? என்பது தேர்தலில் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்காத ஒரு போலி விவசாயிதான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு பயிர்க் காப்பீடாக சுமார் ரூ.12 ஆயிரம் கோடியை அ.தி.மு.க. அரசு வழங்கி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது. எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வழங்க சொன்னார்கள்.
ஆனால், முதலமைச்சர் ஆனவுடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 மட்டுமே வழங்கினார். 2021-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து, இன்றுவரை அதனை செயல்படுத்தவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்கள். ஆனால், தற்போது முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்குவதுமில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை.
தலைவாசலில் கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி என்பதை பெருமையாகக் கூறுவேன்.
இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன். விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா?’ நீங்கள்தான் போலி விவசாயி. அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும் தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.
போலி விவசாயி யார்? பொது மேடையில் விவாதிக்க முதல்வர் ஸ்டாலினை அழைக்கிறார் பி.ஆர்.பாண்டியன்…