தென்காசி: தென்காசி அருகே உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட கெட்டுபோன உணவை சாப்பிட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அந்த முதியோர் இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். இந்த முதியோர் இல்லத்தில் சம்பவத்தன்று இரவு உணவருந்திய சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதியோர் இல்லம் நிர்வாகம், அவர்களை உடடினயாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தது. அவர்கள் சாப்பிட்ட உணவு கெட்டு போய் இருந்ததாக கூறப்படுகிறது.
சுந்தரபாண்டியபுரத்தில் இந்த முதியோர் இல்லம் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், பாட்டா குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இந்த முதியோர் இல்லத்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கு தங்கியிருந்தவர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 11 பேர் முதற்கட்டமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சூழலில், இதுவரை 4 பேர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கிடையே, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் மற்றும் மருத்துவர்கள் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு கெட்டு போய் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த முதியோர் காப்பகத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகள், பார்வை திறன் குறைவுடையோர் உட்பட 14 ஆண்கள், 24 பெண்கள் உள்பட 42 பேர், 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் மேலும், 55 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.