169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ்காரர்கள், ஏழு பேர் போர்த்துகீசியர்கள், ஒரு கனேடிய பயணி உட்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் நகரில் இன்று விழுந்து தீக்கிரையானது.
நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் இதுவரை 204 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதனை உறுதி செய்துள்ள அகமதாபாத் காவல்துறை தலைவர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்த நபர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இறப்பு எண்ணிக்கை குறித்து இன்னும் எதுவும் கூற முடியாது என்று தெரிவித்த அவர், விமானம் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.
உயிர் பிழைத்தவர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் விஸ்வாஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.