சென்னை:   மத்தியஅரசின் தொடர் அழுத்தம் காரணமாக,  தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடு கடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக  சிறப்பு படை ஒன்றை நியமிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டவிரோத குடியேற்றம் என்பது அந்த நாட்டின் குடிவரவு சட்டங்களை மீறி ஒரு நாட்டிற்கு மக்கள் இடம்பெயர்வது அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை இல்லாமல் ஒரு நாட்டில் தொடர்ந்து வசிப்பது.  இதன்மூலம் பல நாடுகளில் வசிக்கும் மக்கள், தங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் கருதி, பல நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். இதுபோன்ற புலம்பெயர்பவர்களால் பல்வேறு சர்ச்சைகளும் உருவாகிறது. இதையடுத்து அமெரிக்கா உள்பட பல நாடுகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை நாடு கடத்தி வருகின்றன.

இதைத்தொடர்ந்து,  இந்தியாவிலும், சட்டவிரோதமாக  தங்கியிருக்கும் வெளிநாட்டினர் வெளியேற வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் உள்பட வந்தேறிகளை  கண்டறிந்து , அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்ளுக்கு  மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவு பிறப்பித்து இருந்தது.

  இதை ஏற்று சில மாநிலங்களில் வந்தேறிகளை கண்டறிந்து நாடு கடத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. டில்லியின் உத்தம் நகர் மற்றும் சாவ்லா ஆகிய பகுதிகளில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக குடியேறி, சிலர் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியேறியவர்களை போலீசார் அடையாளம் கண்டனர். அதன்படி, 71 பேரை போலீசார் கைது செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். அவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது விசாரணையில் அம்பலமானது. இதில், வங்கதேசத்தினர் 41 பேர், மியான்மரின் ரோஹிங்கியா மக்கள் 17 பேர், நைஜீரியா நாட்டினர் 13 பேர் ஆவர். அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டனர்.

ஆனால், தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருபவர்களை வெளியேற்றுவதில் மாநில அரசு அக்கறை காட்டாத நிலையில், மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில், மாநிலங்களில், சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் உள்பட வந்தேறிகளை  கண்டறிந்து வெளியேற்றும் வகையில்,  மாவட்டந்தோறும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு படையை நியமிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஏற்று தமிழ்நாடு அரசு அதற்கான பணிகளை முடுக்கி விட்டிருப்பதாக கூறப்படுகிறது.