சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொர்கதையாகி வருகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தாலும், வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இன்று முன்னாள்முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழநிச்சாமி வீடு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் மற்றும் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மூலம் மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை மாநகரப் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். இதில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பின் கீழ் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அவரின் பாதுகாப்பை ’இசட் பிளஸ்’ பிரிவுக்கு மாற்ற அதிமுகவினர் கோரிக்கை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.