சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் இந்த மாத இறுதியில் நடைபெற இருந்த எஸ்ஐ தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கான தேர்வு இந்த மாதம் இறுதியில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 1,299 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு ஜூன் 28,29ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எஸ்ஐ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சீனியாரிட்டி தொடர்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். காலிப் பணியிடங்களில் ஏற்கனவே பணியில் உள்ளோருக்கு 20%, பொதுத்தேர்வர்களுக்கு 80% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணியில் உள்ள காவலர்களுக்கு எழுத்துத்தேர்வு மட்டும் நடத்தப்படும் எனவும் உடல் தகுதி தேர்வு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் வருபவர்களுக்கு எழுத்துக்தேர்வுடன் உடல் தகுதித்தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி இடம்பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிடட்டது. இதனால், 20% ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஜூன் 28,29ம் நடைபெற இருந்த எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
