மதுரை: மதுரையில் வரும் 22ந்தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும்,  முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக சட்டப்படி உரிய முடிவு எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம்  அறிவுறுத்தி உள்ளது.

காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும் என்று அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ள நீதிமன்றம், காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம் என்றும் அனுமதி வழங்கி உள்ளது.

இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் வரும் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 5 முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், 22-ம் தேதி ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும்,  உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. காவல்துறை மாநாட்டில் பூஜைகள் நடத்த அனுமதி வழங்க மறுத்து வருகிறது. இதை எதிர்த்து, நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்றது.  அப்போது காவல்துறை தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும். காவல்துறை மனுவை பரிசீலனை செய்யும் வரை முன்னேற்பாடுகள் செய்யலாம்.  ஆனால், பூஜை செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், காவல்துறை சார்பில் அரசியலமைப்பு மற்றும் சட்டப்படி உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது பெங்களூரு ஸ்டேடியம் நிலச்சரிவு போன்ற அசம்பாவிதம் நடைபெற்றால் என்ன செய்வது என காவல்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த இந்து முன்னணி வழக்கறிஞர், இதுபோன்ற எத்தனையோ மாநாடுகள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன.  அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மாநாடு நடைபெறும் என்று உறுதி அளித்தார்.

தமிழக இந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோவில்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் வரும் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 5 முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், 22-ம் தேதி ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை அம்மா திடல் தனியார் பட்டா நிலம். அங்கு மாநாடு நடத்த சம்பந்தப்பட்டவரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சியினருக்கு மாநாடு மற்றும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் அனுமதி கோரி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அறுபடை வீடுகள் மாதிரி அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி மறுத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் முத்துக்குமார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், , “தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் ஜூன் 22ஆம் தேதி ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடக்க உள்ளது. இது ஒன்றும் பாஜக அல்லது சங்பரிவார் நடத்தும் நிகழ்ச்சி கிடையாது. முருக பக்தர்கள் அனைவரும் இணைந்து நடத்தும் மாநாடு.

எப்படி கந்த சஷ்டி யாத்திரையை இழிவுபடுத்தினார்களோ? அதேபோல் இந்த மாநாடு குறித்தும் பேசுகின்றனர். ஆனால், கந்த சஷ்டி மாநாட்டிற்கு கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலையும், தாண்டி மக்கள் பெரும் ஆதரவை அளித்தனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்துக்களையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி வருகின்றனர். அதனால் தமிழக மக்கள் வேதனையில் இருக்கின்றனர். எனவே, மக்கள் இந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்து கொண்டுள்ளார்கள். ஆகையால், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாநாடாக இந்த மாநாடு அமையப் போகிறது.

முருகர் மாநாட்டை தற்போது, தமிழ்நாட்டில் நடத்தப் போகிறோம். ஏற்கனவே குஜராத், வாரணாசி போன்ற இடங்களில் காசி தமிழ் சங்கமம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டை நடத்தி வருகிறோம். இவையெல்லாம் தெரியாமல் சிலர் பேசுகின்றனர். உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், அங்கு வந்து பார்த்து வந்தால் தான் அவர்களுக்கு தெரியும். தமிழர்களின் பாரம்பரியம், ஒற்றுமை, வீர விளையாட்டுகள் எந்த அளவுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது அப்போதுதான் புரியும்.

தற்போது, மதுரையில் நடத்தும் மாநாட்டிற்கு உகந்த இடம் தமிழ் மண்தான், முருகர் தமிழ் கடவுள். எனவே தான் தமிழ்நாட்டில் அதுவும் மதுரையில் இந்த மாநாட்டை நடத்தப் போகிறோம்,” என அவர் கூறினார்.