திருமணத்திற்கு முன்… மரண பீதியை கிளப்பிய மணமகளின் கைப்பை.

ஏராளமான கனவுகளோடு தனது கல்யாணத்திற்காக ஏழரை லட்சம் ரூபாய்செலவில் ஏற்பாடுகள் செய்திருந்தார் 35 வயதான அனீஸ். மேட்ரிமோனியல் தொடர்பு மூலம் தனக்கு அழகான மனைவி வாய்க்கப் போகிறார் என காத்திருக்கிறார்.
பரனோடு கிராம பஞ்சாயத்து வார்டு மெம்பரான அனீஸ், திருமண நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எதேச்சையாக மணப்பெண்ணின் பைகளை ஆராய்ந்து இருக்கிறார். அப்போதுதான் பைக்குள்ளிருந்து ஆயிரம் நல்ல பாம்புகள் ஒரே நேரத்தில் கடித்தது போல அப்படியொரு அதிர்ச்சியை உணர்ந்தார் அனீஸ்.
காரணம் மணப்பெண்ணின் பைக்குள் ஏராளமான ஃபோட்டோக்கள். அத்தனையும் விதவிதமான ஆண்களுடன் மணக்கோலத்தில். அத்துடன் திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களும் கத்தை கத்தையா கிடந்தன.
ஏதோ ஒரு மோசடிக்காரியிடம் வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த அனீஸ், உடனடியாக போலீசாருக்கு தகவல் தருகிறார். போலீசார் வந்து மணப்பெண்ணை விசாரித்த போது தான் அதிர்ச்சியான தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன.
கஞ்சிரமோட்டம் என்ற ஊரைச் சேர்ந்த ரேஷ்மா சந்திரசேகரன் என்ற அந்த 32 வயது பெண்ணுக்கு, 2014 ஆம் ஆண்டு, முதல் திருமணம் நடந்துள்ளது. காலடி சங்கராச்சாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நல்ல மாணவியாக திகழ்ந்த போதே இந்த திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் அதன் பிறகு திருமணம் கடந்து இன்னொருவரின் தொடர்பில் ரேஷ்மா கர்ப்பமாகி விடுகிறார்.
கணவனை விட்டுப் பிரிந்து இந்த குழந்தையை பெற்றெடுத்த கையோடு தான் அடுத்தடுத்து திருமணம் மோசடிகளில் இறங்கி இருக்கிறார் ரேஷ்மா.
இந்த வரிசையில் கடைசியில் சிக்கியவர் தான் அனீஸ். இவருடன் திருமணத்தை முடித்துக் கொண்டு அடுத்த வாரம் இன்னொருவரையும் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார் ரேஷ்மா.
எர்ணாகுளம் போலீசாரிடம் பிடிபட்டிருக்கும் ரேஷ்மாவிடம் தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடைசியாக மணக்கோலத்தில் ஏமாந்த அனீஸிடம் இது பற்றி கேட்டால், ஏழரை லட்ச ரூபாய் பணம் போய்விட்டது என்கிற வருத்தத்தை விட ஒரு மோசக்காரியிடம் சிக்கி சின்னாபின்னமாகாமல் தப்பித்தோமே என சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார்.