டெல்லி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6500 ஐ நெருங்கி உள்ளது.’

கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. பிறகு ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆயினும் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
தற்போது கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது, இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,500ஐ நெருங்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியா முழுவதும் மொத்தம் 6,491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரளாவில் மொத்தம் 1,957 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.,
மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், டெல்லி, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் எந்த இறப்புகளையும் மத்திய அமைச்சகம் பதிவு செய்யவில்லை என்றாலும், ஜனவரி 1, 2025 முதல் மொத்தம் 65 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கொரோனாவின் புதிய வகையான எக்ஸ்.எப்.ஜி., திரிபு, நம் நாட்டில் 163 பேருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 89 பேருக்கு எக்ஸ்.எப்.ஜி., பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் 16, கேரளாவில் 15, குஜராத்தில் 11, ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஆறு பேருக்கு புதிய ரக வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது