இம்பால்
மணிப்பூரில் தடையை மீறி நடந்த போராட்டத்தில் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. அந்த தலைவரை விடுவிக்கக்கோரி, மெய்தி இன மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த கலவரத்தை கட்டுப்படுத்த 5 மாவட்டங்களில் இணையதள சேவையை முடக்கி வைக்க ஆளுநர் அஜய்குமார் பல்லா உத்தரவிட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. , தடை உத்தரவை மீறி நள்ளிரவிலும் போராட்டம் நீடித்தது. இதில் இம்பால் கிழக்கு மாவட்டம் யாய்ரிபோக் துலிஹலில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததால் கட்டிடத்தின் ஒருபகுதி சேதம் அடைந்து அரசு கோப்புகள் எரிந்து சாம்பலாகின.
மேலும் இம்பால் மேற்கு மாவட்டம் குவாகிதெல், சிங்ஜமேய் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்ததால், போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். மேலும் போராட்டக்காரர்களை கலைக்க ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர்.
போராட்டக்காரர்கள் பல சாலைகளில் மூங்கில் கம்புகளால் தடையை ஏற்படுத்தியும், இம்பால் விமான நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளில் தடுப்புகள் அகற்றப்பட்டன. மேலும் பெண்கள் குழுக்களும் போராட்டத்தில் இணைந்து குராய் என்ற இடத்தில் அவர்கள் டார்ச்லைட் ஏந்தி ஊர்வலம் நடத்தினர். தற்போது, மணிப்பூரில் மீண்டும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.