மும்பையில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்தில் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பலியான நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பை புறநகர் ரயில்களில் நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், காலை வேலையில் லட்சக்கணக்கான மக்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்துவருகின்றனர்.
இதனால் அனைத்து ரயில்களும் கடந்த பல தசாப்தங்களாக கூட்ட நெரிசலுடனேயே செல்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு 2009ம் ஆண்டு ஒரு சில வழித்தடங்களில் 12 பெட்டிகளுக்கு பதிலாக 15 பெட்டிகள் கொண்ட ரயிலை காலை மற்றும் மாலை பீக் ஹவர்ஸில் மட்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து பயணிகளின் தொடர் கோரிக்கையால் 2021ம் ஆண்டு வேறு சில வழித்தடங்களிலும் 15 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயங்கத் துவங்கின.
இருந்தபோதும் கூட்டம் அலைமோதுவது தொடர்கதையாகவே உள்ளது, இந்த நிலையில் இன்று ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் தவறி விழுந்ததில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த சம்பவம் மும்பை ரயில் பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ரயில்களில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, ரயில்வே வாரிய நிர்வாக இயக்குனர் (தகவல் மற்றும் விளம்பரம்) திலீப் குமார், “ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவு பொறுத்த ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது” என்று கூறினார்.
மேலும், வரும் காலங்களில் மும்பை புறநகர் ரயில்வே புதிதாக வாங்கவுள்ள ரயில்பெட்டிகளில் இந்த தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
2004 – 2014 வரையிலான பத்தாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 3300 ரயில்பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2014 – 2024 வரையிலான பத்தாண்டில் ஆண்டுக்கு சராசரியாக 5801 ரயில்பெட்டிகள் தயாரித்து நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் அனுப்பி வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் விரைவில் இந்த தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட ரயில்பெட்டிகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.