டெல்லி: கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் முன்ஜாமீன் இயந்திரத்தனமாக வழங்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த உத்தரவின் மூலம் அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது.

பல முக்கிய குற்றவழக்குகள், மற்றும் பொருளாதார முறைடு, ஊழல் வழக்குகளில், குற்றவாளிகள் என கருதப்படும் நபர்களுக்கு முன்ஜாமின் வழங்கும் போக்கு நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் ஓராண்டு தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது பேசும்பொருளாக மாறியது.
இந்த நிலையில், வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மாநில உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இயந்திரத்தனமாக முன்ஜாமீன் வழங்கப்படக்கூடாது என்று கண்டித்துள்ளது.
வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் தன்மையையும் புரிந்து கொள்ள பாட்னா உயர்நீதிமன்றம் “தெளிவாகத் தவறிவிட்டது” என்பதைக் கவனித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர் எட்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நான்கு பேருக்கும் முன்ஜாமீன் வழங்கிய உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டவரின் மகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு பாட்னா உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கிய நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து எசய்ததுடன், “ஐபிசி பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் வழங்குவதற்கான எந்த காரணத்தையும் உயர் நீதிமன்றத்தின் (பாட்னா) உத்தரவு வெளிப்படுத்தவில்லை” என்று சாடியது.
மேலும், நீதிபதிகள் எந்தவொரு வழக்கிலும் இயந்திரத்தனமாக முன்ஜாமின் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.