சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

நாடு முழுவதும் மே 4ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக சில இடங்களில் எதிர்பாராதவிதமான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது, தேர்வு நடைபெற்ற ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே. நகர் பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவன் ஒருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில், தங்களுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.குமரப்பன், தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்ததுடன், மாணவர்களின் மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இநத் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு மற்றும் என்டிஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், அதன் காரணமாக நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது” என்று கூறியது. இதையடுத்த தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.
இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குமரப்பன், 22 லட்சம் மாணவர்கள் நீட் எழுதிய நிலையில், ஒருசிலருக்காக மறுதேர்வு நடத்தினால் , அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும், . ஆகவே மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரிய மாணவர்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறோம், என உத்தரவிட்டார்.