சென்னை: தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல  என்று தனது  கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர்  அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பதில் தெரிவித்து உள்ளார்.

பஹல்காம்  பயங்கரவாதி தாக்குதல், அதற்கு இந்திய ராணுவம் கொடுத்த சிந்தூர் ஆபரேசன் பதிலடி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் நில நாடுகளில் பாகிஸ்தான் எதிர்பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில், அதை முறியடிக்க, இந்திய அரசு, அனைத்துகட்சிகளின் எம்.பி.க்கள் கொண்ட குழு அமைத்து, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கியது. இந்த குழுவில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி.கனிமொழி உள்பட பல எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் பொறுப்பேற்றனர். இதை காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இந்த குழுவிற்கு,  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் சார்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு நான்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, கௌரவ் கோகோய், டாக்டர் சையத் நசீர் உசேன், ராஜா பிரார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன . ஆனால், அவர்கள் பெயர்கள் சேர்க்கபடாமல், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த சசிதரூர் எம்.பியை மத்தியஅரசு தேர்வு செய்தது. அதனால்,   அனைத்துக் கட்சி குழு விஷயத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாகவும் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதைத்தொடர்ந்து பல காங்கிரஸ் தலைவர்களும் சசிதரூரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,   இதுதொடர்பான கேள்விக்கு ஏற்கனவே பதில் கூறிய  காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மத்தியஅரசு அமைத்துள்ள பட்டியல்,   நாங்கள் கொடுத்த பட்டியல் அல்ல என காங்கிரஸ் கட்சி தலைமை கூறுவது பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். அதை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது என்னை அவமதிக்கும் செயலா என நீங்கள் கேட்கிறீர்கள். யாரும் என்னை அவ்வளவு எளிதில் அவமானப்படுத்திவிட முடியாது’ என்று தெரிவித்திருந்தார். மேலும் சசிதரூர் பிரதமர் மோடியின் சில நடவடிக்கைகளை பாராட்டியும் பேசினார். இது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,   மத்திய அரசு 7 குழுக்களில் ஒன்றான  காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒரு குழுவும் ஒன்று. சசிதரூரை தவிர, அந்த குழுவில் எம்.பி.க்கள் சர்பராஸ் அகமது, காந்தி ஹரிஷ் மதுர் பாலயோகி, சஷாங்க் மணி திரிபாதி, புவனேஸ்வர் கலிதா, மிலிந்த் தியோரா, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினர்   கடந்த மாதம் 24-ந்தேதி இந்தியாவில் இருந்து நியூயார்க் சென்று கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசிலுக்கு பயணம் செய்து கடந்த 3-ந் தேதி இந்த குழு சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக வாஷிங்டனுக்கு வந்தது. அங்கு அமெரிக்க செனட் குழுவினர், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினர்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், பாகிஸ்தான் மோதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயாராக இருப்பதாக கூறினோம். பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொண்டதன்பேரில் மோதல் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மொழியை பயன்படுத்தும் வரை, நாங்கள் பலத்தின் மொழியை பயன்படுத்துவோம் அதற்கு மூன்றாம் தரப்பு தேவையில்லை.

அப்போது அவர்மீதான காங்கிரஸ் கட்சியின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறி சசிதரூர்,  தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் என்று கருதுபவர்கள் தங்களை தாங்களே கேள்வி கேட்டு கொள்ள வேண்டும். தனிநபர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. சமூக ஊடகங்களில் சசி தரூர் காங்கிரசில் தொடர்ந்து இருப்பாரா? அல்லது பா.ஜனதாவில் சேருவாரா? என்பது குறித்து விவாதம் நடைபெறுகிறது.

நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. எனது பதவிக்காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் அதுகுறித்து ஏன் கேள்வி எழ வேண்டும் என்று எனக்கு தெரிய வில்லை.

நாங்கள் இங்கு ஒரு கட்சி அரசியல் நோக்கத்துக்காக வரவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவின் பிரதிநிதிகளாக வந்து இருக்கிறோம். தேசிய நலன், தேசிய பாதுகாப்பு என்று வரும்போது தேசம் ஒன்றுபட்டுள்ளது என்று நினைக்கிறேன். யாரும் எங்களை மோதலை நிறுத்துங்கள் என்று மத்தியஸ்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

அமெரிக்கா மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறுவதை கவனிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் வெள்ளை மாளிகையுடனான இந்தியா உறவில் எந்தவிதமான சிக்கல்களையும் ஏற்படுத்த நாங்கள் இங்கு வரவில்லை.

இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.