சென்னை : மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனன் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதுபோல பாமக தலைவர் அன்புமணியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனம். சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.எஸ். ஜனார்த்தனன் காலமானார். 3.5% இஸ்லாமியர் உள் இடஒதுக்கீடு, 3% அருந்ததியர் உள் இடஒதுக்கீடு ஆகிய சட்டங்கள் இவரது பரிந்துரையின்படி மேற்கொள்ளப்பட்டவை. அவரது மறைவுக்கு அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனன் மறைவு குறித்து தமிழன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன். நீதித்துறையின் மாண்பையும். சீரிய மரபையும் காத்துவந்தவர் என்பதுடன். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொண்டுவருவதற்கான பரிந்துரையை அளித்த குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக இருந்த போது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஆவார். நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனன் காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த நீதியரசர் ஜனார்த்தனன் கடுமையான உழைப்பால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர். 1988-ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அவர், 2015-ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்தவரும் இவர் தான். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஒருவர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர்.
நீதியரசர் ஜனார்த்தனத்தின் மறைவு சமூகநீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். நீதியரசர் ஜனார்த்தனத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதிக்கு அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மறைந்த நீதிபதி ஜனார்த்தனம், கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சியின்போது, அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்தார். அப்போது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே ‘கிரீமி லேயரை’ அடையாளம் காணும் அறிக்கையை தயார் செய்து, , மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.
நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைத் தொடரும் முயற்சியில், திருமதி ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தற்போதைய இடஒதுக்கீட்டின் அளவைப் பாதுகாக்கக் கோரி டிசம்பர் 31, 1993 அன்று சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. ஒரு சட்டமாக மாறிய பிறகு, இது அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு, அதை நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டதாக மாற்றியது.