பெங்களூரு: ஐபிஎல் வெற்றி பேரணியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பேலியான விவகாரம் குறித்து, பெங்களூரு உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை நடத்த மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையினரின் பொறுப்பின்மை, கவனக்குறைவே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என மாநில முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்.

பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய ஐபிஎல் வெற்றி பேரணி கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். இந்த நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணியின் (ஆர்சிபி) வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா உட்பட 5 காவலர்களை இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் சிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு ஒப்படைக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த பேரணிக்கு காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தும், அதை ஏற்க மறுத்து ஆட்சியாளர்களும், ஆர்சிபி நிர்வாகத்தினரும் முரண்டு பிடித்து வெற்றி பேரணியை நடத்தியதால்தான் இந்த இழப்பு என காவல்துறையினர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்த சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சோக நிகழ்வுக்கு மாநில காங்கிரஸ் அரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடி உள்ளது.
இந்த விவரும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் சித்தராமையா, “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் வாரியம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதான வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்படும். இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை கைது செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விவகாரத்தில் உள்ள நடைமுறை குறைபாடுகளை ஆராய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும்.
கடமையில் அலட்சியமாக செயல்பட்டதற்காக கப்பன்பூங்கா காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர், மாநகர உதவி காவல் ஆணையர், மாநகர காவல் துணை ஆணையர், மாநகர கூடுதல் காவல் ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. காவல்துறையினரின் பொறுப்பின்மை, கவனக்குறைவே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் எனத் தெரிகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் நான் எம்.எல்.ஏ ஆன பிறகு (1983), இதுபோன்ற ஒரு சம்பவம் ஒருபோதும் நடந்ததில்லை. தற்போது நடந்த இந்த சம்பவம் எங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கில் இருந்து யாரும் தப்பிக்க மாட்டார்கள்”.
இவ்வாறு கூறினார்.