கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.
“மன்னிப்பு கேட்டிருந்தால் நிலைமை சரியாகியிருக்கும்” என்று அது கூறியது.

கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கும் திரையிடுவதற்கும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’, படத்தின் விநியோகம் மற்றும் வெளியீட்டிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா, “கமலின் அறிக்கை கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்தது ஏன்?” என்று கேள்வியெழுப்பினார்.
மொழி என்பது ஒரு மக்களின் உணர்ச்சி மற்றும் கலாச்சார அடையாளமாகும். ஒரு முழு மொழியியல் சமூகத்தின் பெருமையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அறிக்கைகளை வெளியிட யாருக்கும் உரிமை இல்லை என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
‘அப்படி ஒரு அறிக்கையைச் சொல்ல நீங்கள் ஒரு வரலாற்றாசிரியரா அல்லது மொழியியலாளரா?’ “எந்த மொழியும் இன்னொரு மொழியிலிருந்து பிறப்பதில்லை” என்று நீதிபதி நாகபிரசன்னா விமர்சித்தார்.
யாருடைய உணர்ச்சிகளிலும் சவாரி செய்யக்கூடாது. ஆர்டர் செய்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மன்னிப்பு கேட்க முடியாவிட்டால், ஏன் கர்நாடகாவில் படத்தை வெளியிட வேண்டும்? என்று கேட்ட நீதிபதி, தானும் ‘தக் லைஃப்’ படத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்… ஆனால் இந்த சர்ச்சையால் அதைப் பார்க்க முடியவில்லை என்று ஆதங்கத்துடன் கூறினார்.
இதையடுத்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த நீதிபதிகள், கர்நாடக அரசு, கர்நாடக ஃபிலிம் சேம்பர் மற்றும் கமல் தரப்பினர் கலந்து பேச வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்தது.