சென்னை: தமிழ்நாட்டில் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள்   மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று காலை முதலே மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்த நிலையில், ஆசிரியர்கள் அவர்களுக்கு இனிப்பு வழங்கியும், மலர் கொடுத்தும் அன்போடு வரவேற்றனர்.

இந்த நிலையில்,  இன்று (2.6.2025) சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  கல்வித்துறை சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின கலந்துகொண்டு,மாணவ, மாணவியர்களுக்கு  2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கி, அந்த  நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.6.2025) சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துதல், பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைத்தல், மாதிரி பள்ளிகளை உருவாக்குதல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்களோடு, புத்தகப்பைகள், காலணிகள் (Footwear’s), காலேந்திகள் (Shoes), காலுறைகள், மழைக்கோட்டுகள், கம்பளிச்சட்டைகள், வண்ணப்பென்சில்கள், கிரையான்ஸ், கணித உபகரணப் பெட்டிகள், கணுக்காலேந்திகள் (Ankle boot) மற்றும் புவியியல் வரைபடங்கள் என பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.

2025-26 ஆம் கல்வியாண்டில் சுமார் 311 கோடி ரூபாய் மதிப்பிலான 4.30 கோடி பாடநூல்கள், சுமார் 457 கோடி ரூபாய் மதிப்பிலான 1.3 கோடி சீருடைகள், 162 கோடி ரூபாய் மதிப்பிலான 9.6 கோடி நோட்டு புத்தகங்கள் மற்றும் 211 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள், சீருடைகள் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவ, மாணவியர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்குவர்.

முதலமைச்சர், மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள், சீருடைகள் மற்றும் பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து, திறன்மிகு வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து ஆசிரியர் நடத்திய பாடத்தினையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, இ.பரந்தாமன், துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் நிலைக் குழு தலைவர் நே.சிற்றரசு, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு.பி.சந்தரமோகன், இ,ஆ,ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.