டில்லி
சென்ற மாதம் இந்தியாவில் ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது.

ஒவ்வொரு மாதமும் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் வசூலான ஜி.எஸ்.டி.யின் மதிப்பு ரூ.2.01 லட்சம் கோடி என செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. முந்தைய மாதம் (ஏப்ரல்) வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டதை விட இது குறைவாகும்.
சென்ற ஆண்டு மே மாத வசூலை விட இது 16.4 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற ஆண்டு மே மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த மாதம் மத்திய ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.35,434 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.43,902 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.09 லட்சம் கோடியாகவும் இருந்தது. மேலும் செஸ் வரி மூலம் ரூ.12,879 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
டந்த மாதத்தில் திருப்பிச்செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூ.27,210 கோடி அதாவது 4 சதவீதமாக இருந்ததாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வசூல் 17-ல் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குஜராத், ஆந்திரா, தெலுங்கானா போன்ற பெரிய மாநிலங்களும் 6 சதவீதம் வரை வரி அதிகரிப்பை கொண்டிருந்த நிலையில் மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் சராசரியாக 10 சதவீத நடுத்தர உயர்வை பெற்றிருந்தன.