டெல்லியின் ஜங்புரா பகுதியில் அமைந்துள்ள மதராசி கேம்பில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கையை டெல்லி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதனால் 4 தலைமுறைகளாக அங்கு வாழ்ந்துவரும் மக்கள் தவித்து வருகின்றனர்.
மதராசி முகாம் பகுதியில் 370 குடிசைப்பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன, இதில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

370 குடிசைவாசிகளில், 189 பேர் டெல்லி சேரி மற்றும் ஜுகி ஜோப்ரி மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் கொள்கை 2015 இன் கீழ் மறுவாழ்வுக்குத் தகுதியானவர்களாகக் கருதப்பட்டுள்ளனர்.
தகுதியுள்ள குடும்பங்களுக்கு அங்கிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் டெல்லியின் புறநகர் பகுதியான நரேலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள குடும்பங்கள் வீடில்லாமல் அல்லாடி வருகின்றனர், இந்த நிலையில் டெல்லியில் மதராசி கேம்ப் மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினால் உதவி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உத்தரவின்படி, புது டெல்லி உள்ள “தமிழ்நாடு இல்ல” அலுவலகம், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, “மதராசி கேம்ப்” குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிநடத்தலின் கீழ், “மதராசி கேம்ப் குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். இந்த உதவிகள். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.