மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள அதிமுக 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேமுதிக-வுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதையடுத்து அதிமுக தனது கடமையை செய்திருக்கிறது எங்கள் கடமையை நாங்கள் ஆற்றுவோம் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும்,
அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
தமிழக எம்.பி.களின் பதவிகாலம் முடிய உள்ள நிலையில் மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு திமுக சார்பில் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள், அதிமுக சார்பில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவரான தனபால் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை ஆகியோர் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2024 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக-வுக்கு 5 சட்டமன்ற தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்திருந்தது.
இதனால், தேமுதிக-வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு கிடைக்கும் என்று அக்கட்சி எதிர்பார்த்திருந்தது, ஆனால் 2026ல் தான் தேமுதிக-வுக்கு வாய்ப்பு என்று அதிமுக அறிவித்துள்ளதை அடுத்து பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “தேர்தலை மையமாகக் கொண்டுதான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இயங்குகிறது. அந்த வகையில் நாங்களும் தேர்தலை மையமாகக் கொண்டுதான் நகர்கிறோம்.
2026 இல் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுவதாக அதிமுக அறிவித்திருப்பதும் தேர்தலை மனதில் கொண்டு தான் அறிவித்திருக்கிறது”
“2024 சட்டமன்ற தேர்தலின் போது எழுத்துப்பூர்வமாக கொடுத்த வாக்குறுதி குறித்த தனது நிலையை அறிவிக்க வேண்டிய இடத்தில் அதிமுக இருந்தது தற்போது அது 2026ல் சீட் வழங்கப்படும் என்று ஓராண்டு கழித்து தெரிவித்துள்ளது” என்று விரக்தியுடன் கூறினார்.
“அதிமுக தனது கடமையை ஆற்றியுள்ளது, 2026 ஜனவரியில் தேமுதிக பொதுக்குழு கூடவுள்ளது, அப்போது நாங்கள் எங்கள் கடமையை ஆற்றுவோம்” என்று பிரேமலதா சூசகமாகப் பேசினார்.
மேலும், கேப்டன் விஜயகாந்த் மறைந்த போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்களுடன் இருந்து ஆறுதல் தெரிவித்ததையும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்த பிரேமலதா விஜயகாந்த் அதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.