டெல்லியில் ஜங்க்புரா பகுதியில் குடிசைகள் உள்ளிட்ட வீடுகள் கட்டி கடந்த 4 தலைமுறைகளாக ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக இங்குள்ள வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அடுத்து, அதிகாரிகள் ஜங்க்புரா பகுதியில் உள்ள மதராஸி முகாமில் உள்ள தமிழர்களின் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

ஜங்க்புரா பகுதியில் கடந்த 4 தலைமுறைகளாக வசித்து வரும் இவர்கள் தங்களது பிள்ளைகளை அதே பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கவைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி வாசிகளுக்கு அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள வேறொரு பகுதியில் இடம் வழங்கப்பட உள்ளது.
மதராஸி முகாமில் வசித்து வந்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே வேறு இடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பள்ளிகள், மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய இடத்தில் அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வலியுறுத்தி வீடுகளை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி வாழ் தமிழர்களின் இந்த போராட்டத்தை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அவர்களிடம் சமாதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.