சென்னை: சென்னையில் குடிநீர் வாரியம் தரப்பில் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மையங்கள் விரைவில் திறக்கப்பட இருப்பதாக சென்னை குடிநீர்வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் சென்னை மெரினா கடற்கரை, கபாலீசுவரர் கோவில் உள்பட மக்கள் கூடும் 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் நாளொன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீரை தினமும் விநியோகித்து வருகிறது. அது சுத்தமான நீராக இருந்தாலும், மக்கள் ஆர்ஓ தொழில் நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட்ட, தெளிவான நீரையே குடிக்க விரும்புகின்றனர். அதுவே அவர்களுக்கு மன நிறைவை தருகிறது. அதனால் கணிசமான தொகையை குடிநீருக்காக செலவிட்டு வருகின்றனர். வெளியில் செல்வதென்றால் குறைந்தபட்சம் ரூ.20 கொடுத்து பாட்டில் குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில், வட சென்னையில் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு, கொருக்குப்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் உள்ளிட்ட 50 இடங்களில், ஆர்ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச குடிநீர் மையங்களில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 1 லிட்டர், 150 மிலி அளவில், பொத்தானை அழுத்தி குடிநீர் பிடித்துக்கொள்ள முடியும்.
அனைத்து மையங்களிலும் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தொட்டியில் குடிநீரின் அளவு குறைந்தால், அது குறித்து சென்னை குடிநீர் வாரிய தலைமையகம், வார்டு மற்றும் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் செல்லும் வகையில் நவீன கண்காணிப்பு தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டுள்ளன. இந்த குடிநீர் மையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.