திருமலை: திருப்பதி அலிபிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம்  காணப்படுவதால், திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு  திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் முழுவதும் பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.  திருமலைக்கு செல்ல போதுமான வாகன வசதிகள் இருந்தாலும், பலர் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற நடந்து சென்றும் தரிசித்து வருகின்றனர். மலைப்பாதை வழியாக அவர்கள் செல்லும் வழியில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவதால், அதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருப்பதி திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்ல இரணடு மலைப்பாதைகள் உள்ளன.  அதன்படி,  அலிபிரி நடைபாலம் மற்றும்  ஸ்ரீவாரி மெட்டு  நடைபாதை வழியாகச் செல்லலாம்.  ஆனால் பெரும்பாலோர் அலிபிரி வழியே திருமலைக்குச் செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நடைபாதை மிகவும் பழங்காலமானது, தமிழ்நாட்டில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் இந்த வழியையே தேர்வு செய்கிறார்கள். இந்த நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு TTD இலவச பேருந்துகளை வழங்குகிறது. மேலும்,  இந்த நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் காத்திருப்பு நேரத்துக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

அதுபோல,  ஸ்ரீவாரி மெட்டு பாதை 1240 படிகள் கொண்ட ஒரு நடைபாதை ஆகும், இந்த பாதைக்கு டோக்கன்கள் 1240வது படியில் வழங்கப்படும். இந்த நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் குறைந்த காத்திருப்பு நேரத்துடன் தரிசன டோக்கன்களைப் பெறுகின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால், அந்த பாதையில் இரவு பக்தர்கள் செல்ல திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

அதன்படி பக்தர்கள் அலிபிரி நடை பாதை வழியாக இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை அப்பகுதி வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் அலிபிரி பாதை வழியாக காலை 5 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும், குறைந்த பட்சம்   70-100 பக்தர்கள் ஒன்றாக செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும்,  பகல் . 2 மணிக்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.