சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பாலம் முதல் நாளிலேயே விரிசல் விழுந்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பாலம் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ.320 கோடியில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், தரமற்ற வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்ட அன்றே விரிசல் ஏற்பட்டு உள்ளதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , அமுமுக தலைவர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2024 ஆண்டு இறுதியில்  பெஞ்சல்புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால், தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட  அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் கிராமத்தை இணைக்கும் உயர்மட்ட பாலம் ஆற்றில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. இந்த பாலம், திறப்பு விழா கண்ட 3 மாதத்தில் ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தியதுடன் திமுக ஆட்சிமீது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இநத் நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், திறப்பு விழா அன்றே விரிசல் ஏற்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து எனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள  பாமக அன்புமணி ராமதாஸ்,  “நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரில் நெரிசலை குறைத்திடும் வகையில் 3.40 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதும், சுற்றுச்சுவரின் கற்கள் பெயர்ந்து விழுவதும் அங்குள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை யும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ரூ.320 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தான் திறந்து வைத்த நிலையில், அதற்கு முன்பாகவே பாலம் சேதமடைந்திருப்பது கட்டுமானப் பணிகளின் தரமற்றத் தன்மையைத் தான் காட்டுகின்றன.

பள்ளிப்பாளையம் பாலம் சென்னை – கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் பாலம் கட்டப்பட்டும் போது கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். அவ்வாறு ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தால் பாலம் சேதமடைந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கோணத்தில் பார்க்கும் போது பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது முதலே அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும் என்று பள்ளிப்பாளையம் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்று கூறி உள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கட்டப்பட்ட பாலங்கள், சாலைகள் ஆகியவற்றின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட பாலம் அடுத்த 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அணையிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது தான் இதற்குக் காரணம் என்று கூறி அரசு தப்பிவிட்டது.

ரூ.320 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே சேதமடைவது இயல்பானது அல்ல. பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழலும், அதன் காரணமாக நடந்த தரமற்ற கட்டுமானப் பணிகளும் இதற்குக் காரணமாக இருக்க முடியும். எனவே, பள்ளிப்பாளையம் பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். பள்ளிப்பாளையம் மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், அது போக்குவரத்திற்கு உகந்தது தானா? என்பது குறித்த பாதுகாப்பு தர ஆய்வுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாமக்கல் அருகே திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்த உயர்மட்ட மேம்பாலத்தின் தரத்தை முழுமையாக பரிசோதிக்கும் முன்பு அவசரகதியில் திறக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி மூலமாக இன்று திறந்து வைக்கப்பட்ட 3.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட உயர்மட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்ற இந்த மேம்பாலப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் எழுந்த புகாருக்கு, திறக்கப்பட்ட முதல் நாளே ஏற்பட்டிருக்கும் இந்த விரிசல் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மூன்றே மாதத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்திருப்பது தமிழக அரசு மேற்கொள்ளும் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மாநிலத்தில் சேதமடைந்த மேம்பாலங்களை சீரமைக்கவும், புதிய மேம்பாலங்களை கட்டவும் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? பாலத்தின் தரத்தை உறுதி செய்யாமல் அவசரகதியில் பாலம் திறக்க வேண்டிய அவசியம் என்ன? என பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளனர். எனவே, பாலத்தில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக சீரமைப்பதோடு, பாலத்தின் தரத்தை முழுமையாக ஆராயாமல் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.