அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக சலுகை தான் இந்தியா-பாகிஸ்தான் போரை ‘தவிர்த்தது’ என்று அமெரிக்கா முதல்முறையாக எழுத்துப்பூர்வ பதிவு செய்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் உலகின் பல்வேறு நாடுகள் மீது விதித்துள்ள வரிகளை எதிர்த்து அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வரி விதிப்பு விவகாரத்தில் டிரம்ப் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளின் மீது கூடுதல் வரிகளை அறிவித்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணையின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்ட வர்த்தக சலுகையை போர் நிறுத்தத்திற்கு காரணம் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியது.
இதுதொடர்பாக மே 23ம் தேதி மன்ஹாட்டனை தளமாகக் கொண்ட சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ அறிக்கையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ‘வர்த்தக அணுகலை’ வழங்கிய பின்னரே மே 10 அன்று ‘போர் நிறுத்தம்’ சாத்தியமானது என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் ஏதும் இல்லை என்று இந்தியா கூறிவரும் நிலையில் முதல்முறையாக அமெரிக்க அரசு எழுத்துபூர்வமாக இவ்வாறு கூறியுள்ளது.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் நிர்வாகத்தின் மூன்று அதிகாரிகள் மே 23 அன்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட சமர்ப்பிப்பைச் செய்ததாக தரவு காட்டுகிறது.
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டதாகத் தெரிவித்துள்ள நீதிமன்றம், அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதுகாக்க அதிபரின் அவசர உத்தரவை விட அமெரிக்க நாடாளுமன்றத்திற்கே கூடுதல் அதிகாரம் உள்ளதாக தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் உடனடியாக இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இது நிறுவனங்களையும் பாதிக்கப்பட்ட நாடுகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள அதேவேளையில், வரும் நாட்களில் இறக்குமதி மீதான வரிகளின் நிலை என்ன என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.