இம்பால்: மணிப்பூரில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளனர்.
மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜகவின் 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக ஆளுநரை சந்தித்த பின் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம் தெரிவித்துள்ளார்.

தற்போது 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 59 எம்எல்ஏக்கள் உள்ளனர், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மரணம் காரணமாக ஒரு இடம் காலியாக உள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில், 32 மெய்ட்டீஸ் எம்எல்ஏக்கள், மூன்று மணிப்பூரி முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் ஒன்பது நாகா சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 44 பேர் உள்ளனர். காங்கிரசில் ஐந்து எம்எல்ஏக்கள் உள்ளனர் – அனைவரும் மெய்ட்டீஸ். மீதமுள்ள 10 எம்எல்ஏக்கள் குக்கிகள். அவர்களில் ஏழு பேர் கடந்த தேர்தலில் பாஜக டிக்கெட்டில் வெற்றி பெற்றனர், இரண்டு பேர் குக்கி மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சுயேச்சை.
இங்கு மே 2023ல் ஏற்பட்ட மெய்ட்டீஸ் மற்றும் குக்கி-சோஸ் இடையேயான இன மோதல்களை அப்போதைய பாஜக அரசாங்கம் கையாண்ட விதம் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், பாஜக தலைவர் என் பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி முதல் மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளது.
2023ம் ஆண்டு மே 20 அன்று குவால்தாபியில் நடந்த சம்பவத்திற்காகவும், தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் ராஜினாமா செய்யவும் மெய்தி குழுக்கள் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இனக்கலவரம் மே 2023 இல் தொடங்கியதிலிருந்து, எந்தவொரு அமைதி நடவடிக்கையிலும் மாநிலத்தின் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்று மெய்தி குழுக்கள் கூறி வருகின்றன.
அதே நேரத்தில் குகி-சோ அமைப்புகள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரே தீர்வு தாங்கள் வசிக்கும் மலை மாவட்டங்களுக்கு ஒரு தனி நிர்வாகத்தை உருவாக்குவதே என்று கூறுகின்றன. இதனால், குவால்தாபி சம்பவம் பதட்டங்களை மேலும் அதிகரித்தது, ஏனெனில் மாநிலத்தில் அமைதியை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு எடுத்து வரும் பல நடவடிக்கைகள் தோல்வியையே சந்தித்தன. அதுபோல உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவும் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை உதவிகளை வழங்கி, அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முன்வந்துள்ளது. பாஜக எம்எல்ஏவான தொக்கோம் ராதேஷியாம் உட்பட 9 எம்எல்ஏக்கள், தங்களுக்கு ஆட்சி அமைக்க அதிகாரம் வழங்கும்படி, மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொக்கோம், மாநில மக்கள் விருப்பப்படி புதிய ஆட்சியமைக்க தயாராக உள்ளதாகவும், தனக்கு 44 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு உள்ளது. இதை ஆளுநரிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஆளுநரிடம் மணிப்பூரில் நிலவும் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.
” நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்வது அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்கு சமம் என சபாநாயகர் டி. சத்யபிரதா தெரிவித்துள்ளார். 44 எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்துள்ளார். புதிய அரசாங்கத்தை அமைப்பதை எதிர்க்கும் யாரும் இல்லை,” என்றும் கூறினார்.
“மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முந்தைய ஆட்சியில், கோவிட் காரணமாக இரண்டு ஆண்டுகள் இழந்தன, இந்த ஆட்சியில், மோதல் காரணமாக மேலும் இரண்டு ஆண்டுகள் இழக்கப்பட்டுள்ளன,” என்று கூறினார்.
மணிப்பூர் மக்களின் நலனுக்காக பாஜக எம்எல்ஏக்கள் பாடுபடத் தயாராக இருப்பதாக ஆளுநர் அஜய் பால் தெரிவித்துள்ளார்.
60 இடங்களைக்கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில் 37 இடங்களைக் கொண்ட பாஜகவுக்கு மட்டுமே பெரும்பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது.