பெங்களூரு

தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் போர்க்கால அடிப்படையில் தீவிர நிவாரணப் பணிகள் நட்ந்து வருகிறது

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக பெய்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடந்த 24-ந்தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.,

மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுந்தது உள்ளிட்ட பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடு இடிந்து விழுந்து, மரம் சாய்ந்து விழுந்து இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 5-வது நாளாக நேற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் குறிப்பாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு, சுள்ளியா, புத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

பல்குனி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இங்குள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்து. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததுடன், மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன.

கடும் வெள்ளம் காரணமாக மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின்  பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் சித்தராமையா,

“கர்நாடகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் 170 தாலுகாக்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க 30, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். வெள்ளம் ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க ஏதுவாக 2 ஆயிரத்து 296 நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் போதுமான அளவுக்கு நிதி உள்ளது.”

என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.