சென்னை: கன்னட மொழி குறித்த பேச்சுக்கு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனுக்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நலையில், அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என்றும், அரசியல்வாதிகள் மொழியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள் என கன்னடர்களுக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதனையொடி படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். அப்போது, இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” என்று தெரிவித்தார்.
கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடக பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் கமல்ஹாசன் படத்தின் போஸ்டர்களை கிழித்து எறிந்து ரகளை செய்ததுடன், இதற்கு கமல்ஹாசன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ‘தக்லைஃப்’ படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், இந்த விஷயத்தில், “எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறையே நான் சொன்னேன் என்றவர், அரசியல்வாதிகள் மொழியைப் பற்றி பேச தகுதியற்றவர்கள். அவர்களுக்கு இதுபற்றிய போதிய படிப்பினை இல்லை. இது எனக்கும் பொருந்தும். எனவே மொழி பிரச்னை பற்றிய ஆழமான கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் வல்லுநர்களிடம் விட்டுவிடுவோம்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம். வடக்கில் இருந்து பார்த்தால் அவர்கள் கூறும் கருத்து அவர்களுக்கு சரி, தென் கோடியிலிருந்து பார்த்தால் நான் சொல்வது சரியாக தோன்றும். இதற்கு மூன்றாவதாக ஒரு கருத்தும் உள்ளது. அதுதான் வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் வல்லுநர்களின் கருத்து. இது என் பதில் அல்ல, விளக்கம். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது”
இவ்வாறு தெரிவித்தார்.