சென்னை:  தமிழ்நாட்டில் காலியாக உள்ள  ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற உள்ள நலையில்,  திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புதிய நபராக கவிஞர் சல்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல திமுக கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் எம்.பி.யான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனைத்தொடர்ந்து காலியாகும் இந்த ஆறு இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணிக்கு 4 இடங்களுக்கும், அதிமுக கூட்டணிக்கு இரு இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதி மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

திமுக வேட்பாளர்கள்:

1. பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்.,
2. எஸ்.ஆர்.சிவலிங்கம்
3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா

ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.