சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக பாலியல் வன்முறைகள், போதை பொருள் நடமாட்டம், செயின் பறிப்பு நிகழ்வுகள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஒரே நாளில், 6 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் பேசும்பொருளாக மாறியது. அதுபோல, பெண்களிடம் அத்துமீறல் போன்ற சம்பவங்களும் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது. இதற்கு காரணம் போதை பொருள் நடமாட்டம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மக்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, தலைமைச் செயலாளர் முருகானந்தம் உயர் அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஆலேசானை கூட்டத்தில், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில், தமிழ்நாட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை சம்பவங்கள் , அதன்மீது பதியப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசித்து, அறிவுரை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.