கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும்..

காலை வைக்கும் இடம் எல்லாம் கண்ணிவெடி வெக்கறாங்களே என்று வடிவேலு ஒரு படத்தில் அலுத்துக் கொள்வார். அந்தக் கதையாகத்தான் போகிறது இப்போது மேடையில் மை பிடித்து பேசுபவர்களுக்கெல்லாம்.

மணிரத்தினம் இயக்கி கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிரம்மாண்டமான திரைப்படம் தக் கலைப் திரைப்படம் பல்வேறு மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்காக பிரமோஷன் நிகழ்ச்சிகள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் தக் லைஃப் பட ஆடியோ லான்ச் விழாவில் பேசிய கமல்ஹாசன், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் குடும்பத்தை புகழ்ந்து பேசினார். அப்போது, நாம் எல்லோரும் குடும்பம் தானே என சொல்லிக்கொண்டே பேச்சுவாக்கில் கன்னட மொழியும் தமிழிலிருந்து பிறந்தது தானே என்று குறிப்பிட்டு விட்டார்.

அன்றைக்கு அந்த விழா மேடையில் இருந்தவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கர்நாடக பாஜகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் மகனுமான பி.ஒய். விஜயேந்திரா கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்„ தமிழ் மொழியை பெருமைப்படுத்துவதற்காக கன்னட மொழியை எப்படி கமல் சிறுமைப்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தென்னிந்தியாவின் பெருமைமிகு கலாச்சார முகமாக கமலஹாசன் இருந்தாலும் அவர் ஒன்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்ல„ கன்னட மொழி எதிலிருந்து பிறந்தது என்பதை சொல்வதற்கு என்றும் விஜயேந்திரா குறிப்பிட்டுள்ளார்.

2500 ஆண்டுகளுக்கு மேலாக தனித்துவத்துடன் வாழும் கன்னட மொழிக்கு எதிராக கமலஹாசன் குறிப்பிட்ட கருத்துக்களுக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தை கன்னட ரக்ஷனா வேதிக அமைப்பின் பிரவீன் ஷெட்டி பிரிவும் கையில் எடுத்துள்ளது.

கன்னடர்களையும் கன்னட மொழியையும் கமலஹாசன் இழிவு படுத்தி விட்டதாக கொந்தளிக்கும் பிரவீன் ஷெட்டி, தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக கமலாக பேசி வரும் கமலஹாசன் தன்னுடைய வியாபாரம் கன்னடத்தில் நடக்க வேண்டும் என்றால் அவரின் கன்னட மொழி விரோத போக்கை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

அரசியல் பக்கம் பரபரப்பான செய்தி என்றாலும் சினிமாக்காரர்களை பொறுத்தவரை இதெல்லாம் ஓசியில் கிடைக்கும் விளம்பரம் என்றே கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் சந்தோஷப்படுவார்கள்.

– செய்திப்பிரிவு.