பெங்களூரு

டிகர் கமலஹாசன் தமிழ் மொசியில் இருந்து கன்னடம் பிறந்ததாக பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார்.

அப்போது நடிகர் கமல்ஹாசன்,

“உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி(கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்”

என்று தெரிவித்தற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா ‘எக்ஸ்’ தளத்தில்,

“தாய்மொழியை நேசிக்க வேண்டும். ஆனால் அதற்காக பிற மொழிகளை அவமதிப்பது அநாகரீகமான செயல்  குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன், தனது தமிழ் மொழியை போற்றுவதற்காக நடிகர் சிவராஜ்குமாரையும் சேர்த்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவம் மற்றும் ஆணவத்தின் உச்சம்.

தென்னிந்தியாவிற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து, மத உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார். இப்போது, 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை புண்படுத்தி கன்னடத்தை அவமதித்துள்ளார். கமல்ஹாசன் உடனடியாக கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்”

என்று பதிவிட்டுள்ளார்