திருவனந்தபுரம்
கேரள நடிகர் உன்னி முகுந்தன் தனது மேனேஜரை தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
`
கேரள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான உண்ணி முகுந்தன் நடித்து வெளியான மார்க்கோ படம் மலையாளம், இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் ஆக ஓடியது. இவர் சீடன் என்ற தமிழ் படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி சமீபத்தில் தமிழில் வெளியான கருடன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் உண்ணி முகுந்தனின் மேனேஜர் விபின்குமார் கொச்சி இன்ஃபோபார்க் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில்
“நான் கடந்த 18 வருடங்களாக சினிமாவில் உள்ளேன். நடிகர் உண்ணி முகுந்தனிடம் 6 வருடங்களாக மேனேஜராக பணிபுரிந்து வருகிறேன். அவர் சமீப காலமாக கடும் மன உளைச்சலில் உள்ளார். மார்க்கோ படத்திற்கு பிறகு எந்தப் படமும் சரியாக ஓடவில்லை. அவர் இயக்க தீர்மானித்திருந்த ஒரு படத்தில் இருந்து பிரபல தயாரிப்பு நிறுவனம் விலகி விட்டது. புதிய படங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த காரணங்களால் ஏற்பட்ட ஆத்திரத்தை தன்னுடன் இருப்பவர்களிடம் தீர்த்துக் கொள்கிறார்.
இன்று (நேற்று) கொச்சியில் உள்ள என்னுடைய பிளாட்டுக்கு வந்து என்னை தாக்கினார். வேறு ஒரு நடிகர் எனக்கு தந்த கூலிங் கிளாசை காலில் போட்டு மிதித்து நொறுக்கினார். டொவினோ தாமஸ் நடித்த நரிவேட்டை படத்தை நான் இன்ஸ்டாகிராமில் பாராட்டியிருந்தேன். இதுதான் உண்ணி முகுந்தனின் ஆத்திரத்திற்கு காரணமாகும். ஆகவே என்னை தாக்கியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.:
என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையொட்டி நடிகர் உண்ணி முகுந்தன் மீது இன்ஃபோபார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்ணி முகுந்தன் தன்னை தாக்கியது குறித்து விபின்குமார் மலையாள நடிகர்கள் சங்கம், தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்திடமும் புகார் கொடுத்துள்ளார். பல முக்கிய விஷயங்கள் குறித்து தனக்கு கூற வேண்டியது உள்ளதால் விரைவில் அந்தத் தகவல்களை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது