திருவள்ளூர்: கடன் தொல்லை காரணமாக,  திருவள்ளுர் அருகே தந்தை-மகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரில் உள்ள புட்லூர் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு 38 வயது ஆணும் அவரது ஆறு வயது மகளும் இறந்து கிடந்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான காவல்துறை விசாரணையில்,   திருவள்ளூரை அடுத்த ஈக்காடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). இவரது மனைவி வாணி. இவர்களது 6 வயது மகள் ஜஷ்வந்திகா என்ற மகள் இருந்தார். லோகநாதன்  கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். மேலும் அவர், ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும்  கூறப்படுகிறது. இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, வாழ்வை சமாளிக்க அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் மேலும் கடன் வாங்கி உள்ளார்.

இந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடன்கொடுத்தவர்களின் தொடர் தொல்லை காரணமாக,   மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளான லோகநாதன்,  தனதுஆசை மகளான 6வயதுடைய மகள் ஜஷ்வந்திகாவுடன் வெளியே செல்வதாக மனைவி வாணியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.  கணவரும், மகளும் வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பாத நிலையில், அவர்களை தொடர்புகொள்ள முயன்ற அவரது மனைவி வாணி அவரது மொபைலுக்கு  போன் பண்ணியபோது, அதுவும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டது இருந்தது தெரிய வந்தது.

இதனால் பதட்டம் அடைந்த வாணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், இதுகுறித்து அருகே  புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதற்கிடையே சம்பவத்தன்று  நள்ளிரவு 11.30 மணியளவில் திருவள்ளூர்- புட்லூர் ரெயில் நிலையத்துக்கு இடையே லோகநாதன் தனது மகள் ஜஷ்வந்திகாவுடன் சேர்ந்து அவ்வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த  திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவல் குறித்து காவல்துறையினர்,  லோகநாதனின் மனைவி வாணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கணவர் மற்றும் மகளின் உடல்களை பார்த்து கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

லோகநாதன், தனது மகள் ஜஷ்வந்திகா மீது மிகுந்த பாசம் வைத்து இருந்தார். இதனால் தற்கொலை முடிவை எடுத்த போது அவர் தனது மகளை விட்டு செல்லமனமின்றி அவளையும் உடன் அழைத்து சென்று இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர்,   அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? லோகநாதன் யார்-யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி இருந்தார். யாரேனும் பணத்தை கேட்டு மிரட்டினரா? என்று அவரது செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.