பொள்ளாச்சி: அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்துதான்,  நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்றதுடன், அங்கு பிரதமரை தனியாக சந்தித்து பேசினார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து உள்ளார்.

தவறு ஏதும் செய்யவில்லை என்றால் உதயநிதி அவர்களின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏற்கனவே முதல்வரின் டெல்லி பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க. ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! என்றும், அதற்காக வெள்ளை குடை பிடித்துள்ளார் என காட்டமாக  விமர்சித்து இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலினும் கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார்.

இநத் நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த  எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்து மேலும் விமர்சித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்,  உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவத,

தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டங்களை 3 ஆண்டுகளாகப் புறக்கணித்தார். தற்போது திடீரென அதில் பங்கேற்றுள்ளார். ஏன் 3 ஆண்டுகள் பங்கேற்கவில்லை? மூன்றாண்டுகள் பங்கேற்றிருந்தால் தமிழக நலன்களுக்காகத் திட்டங்களைப் பெற்றிருக்கலாம் அல்லவா? என கூறியதுடன்,

டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்று, அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது.  மக்கள் பிரச்சினைக்கு இதுவரை செல்லாமல் தற்போது ஏன் சென்றுள்ளார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது கருப்பு பலூன் காட்டிய ஸ்டாலின், தற்போது வெள்ளைக்கொடி பிடிப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்

. எதிர்க்கட்சியாக ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக வந்தபோது ஒரு நிலைப்பாடு. இரட்டை வேடம் போடும் கட்சி திமுக” என்று கூறினார்.

 திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, டாஸ்மாக் ஊழல் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த எடப்பாடி பழனிச்சாமி,  திமுக அரசு வந்த பிறகு பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறேன். ஆனால் இதுவரை தரமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

 தமிழ்நாட்டில்,  சட்டம் ஒழுங்கு மோசமாகவே இருந்து வருகிறது. அரக்கோணத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலையைக் குறிப்பிட்ட அவர், “அந்தப் பெண் கொடுத்த புகாரை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், புகார் காலதாமதமாகவே முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்படுகிறது. அந்தப் பெண் கொடுத்த புகார் பொதுவெளிகளில் வெளியே வந்துள்ளது. இதெல்லாம் வெளியே வரக்கூடாது என்பதுதான் சட்டம் என்று குற்றம் சாட்டியதுடன்,

ஆளுநரிடம் புகார் அளிக்க சென்ற அந்தப் பெண்ணை ஆளுநரை சந்திக்க விடாமல் தமிழக காவல்துறை தடுத்துள்ளது. எவ்வளவு அலங்கோலமான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு அரக்கோணமே சாட்சி என்றார்.

மேலும், செய்தியாளர்கள் உதயநிதியின் மோடியை கண்டும் பயமில்லை, ரெய்டை கண்டும் பயமில்லை என்று கூறியது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய எடப்பாடி பழனிச்சாமி,  அமலாக்கத்துறையை கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி (ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார்?  என்று கேள்வி எழுப்பியதுடு,ன அதற்கான காரணங்கள் இனிமேல் வரும்.  இதுதான் ஆரம்ப கட்டம். இனிமேல் எப்படி பயப்படுகிறார் என்பது தெரிய வரும் என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதனைத் தடுக்கவும் முற்றிலும் ஒழிக்கவும் தொடர்ந்து சட்டப்பேரவையில் குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.