சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச கணினி வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. அதன்படி முதல்கட்டமாக 20லட்சம் மடிக்கணினிகள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய நவீன யுகத்தில் அனைத்து செயல்பாடுகளும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டு வருகிறது. கல்வியையும் டிஜிட்டல் பின்னணியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 2011 செப்டம்பர் 15 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விலையில்லா மடிக்கணினி திட்டம் (Tamil Nadu Free Laptop Scheme) என்ற உன்னத திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. பின்னர் வந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நிதி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாத நிலை தொடர்ந்தது.
இந்த நிலையில், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, விலையில்லா மடிக்கணினி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அரசு பள்ளி மாணவ மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விலையில்லா மடிக்கணினியின் அவசியம் குறித்தும், அவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், திமுக அரசு, விலையில்லா இலவச மடிக்கணினி வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, மடிக்கணினி கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது.
அதாவது, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியது. க
டந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என்றும் இதற்காக முதற்கட்டமாக ரூ. 2,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஆட்சியின் இறுதி ஆண்டான 4வது ஆண்டில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது. டெண்டரின்படி, ஒரு மடிக்கணினியின் விலை ரூ. 20,000 என்ற அளவில் தரமான மடிக்கணினி வழங்க முடிவு செய்துள்ளது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்புத் திறன், 14 அல்லது 15.6 திரை , ப்ளூடூத் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் வகையில், 20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியுள்ளது.
முன்னதாக கடந்த 20ந்தேதி துணைமுதல்வர் உதயநிதி தலைமையில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் அடுத்தகட்டமாக தொழில்நுட்ப தரநிலைக் குழுவினர் இதுவரை வழங்கப்பட்ட மடிக்கணினிகளின் செயல்திறன், மென்பொருள், பேட்டரி திறன் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு மடிக்கணினிகளை விரைந்து வழங்கும் வகையில் விநியோகத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் முருகானந்தம் அறிவித்தார். இந்த நிலையில், தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.