சென்னை: அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், இந்த புயலுக்கு சக்தி என பெயரிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்,  அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாடு, கேரள மற்றும் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அக்னி வெயிலில் தத்தளித்த மக்கள் ஆறுதல் அடைந்தனர்.

இதற்கிடையில்,  கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.  இது  நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.  இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 36 மணிநேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டது.

இந்த நிலையில் அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தற்போது தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுவடையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அப்படி புயலாக மாறினால், அதற்கு சக்தி என்று பெயரிடப்படும்.

இவ்வாறு கூறியுள்ளது.

‘மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், வரும், 27ம் தேதி காற்றழுத்த தழ்வு பகுதி உருவாகக்கூடும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.