சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எதிரான தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம், செல்வப் பெருந்தகைக்கு எதிரான சவுக்கு சங்கர் வழக்கை ஏன் இவ்வளவு அவசரமாக விசாரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளது.
சவுக்கு சங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மீது, தொடரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

தமிழ்நாட்டில்,.தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அளித்த பொதுநல மனுவில், தூய்மைப் பணியாளர்களுக்காக மத்திய அரசு நேஷனல் ஆக்ஷ்ன் ஃபார் மெக்கனைஸ்டு சானிட்டேஷன் எக்கோ சிஸ்டம் (NAMASTE) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2023 ஆம் ஆண்டில், கைமுறை துப்புரவு பணியை முற்றிலும் ஒழிக்க அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தை (AABCS) தமிழக அரசு கொண்டு வந்தது. கையால் துப்புரவு பணி மேற்கொள்பவர்களுக்கு மூலதன மானியங்கள் மற்றும் வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களை அளிப்பதே இந்தத் திட்டங்களின் நோக்கம் என்று கூறியிருந்தார்.
தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்கள் திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன; இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு தொடர்பு உண்டு; ஆகையால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற கோடைகால பெஞ்ச் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டு உண்மைதானா என அறிய விரும்புகிறோம். மேலும், பெருநகர சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரேற்று வாரியத்தின் ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடடன், முறைகேட்டில் தொடர்புடைய நிறுவனத்துக்கும், செல்வப் பெருந்தகைக்கும் தொடர்பு இருந்தால் தமிழ்நாடு அரசுக்குதான் பெரும் பிரச்சனை எனவும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எச்சரித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையை மே 21 ஆம் தேதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து செல்வபெருந்தகை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவில், தம் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கோடைகால பெஞ்ச் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதற்கு தடை விதிக்க கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதே போல, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு எதிராக தலித் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், செல்வப்பெருந்தகைக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடை கால விடுமுறை பெஞ்ச் அப்படி என்ன அவசரமாக விசாரிக்க வேண்டும்? இந்த வழக்கில் கோடைகால விடுமுறை பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில், தலித் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், வழக்கில், அனைத்து தரப்பினரது வாதங்களையும் கேட்ட பின்னரே உத்தரவுகளைப் பிறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.