டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக டெல்லி அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பதிவில், சிந்தூர் நடவடிக்கை குறித்தும், அதில் ஈடுபட்டுள்ள பெண் அதிகாரிகள் குறித்தும் வெறுப்பு கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதுதொடர்பான புகாரின் பேரில், அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அலி கான் மஹ்முதாபாத் அசோகா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியராக பதவி வகித்து வருகிறார்.

மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் ரசித்துக்கொண்டிருந்த சுற்றுலா பணிகள் மீது, ஏப்ரல் 22, 2025 அன்று பயங்கரவாதிகள் தாக்கினர். இதில், 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அப்போது பயங்கரவாத கும்பலின் இருப்பிடங்கள் தகர்க்கப்பட்டன. மேலும், இந்த கும்பலுக்கு ஆதரவாக தங்க அனுமதி அளித்தவர்களின் வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டது.
இதுகுறித்து, அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைப்போல வலதுசாரி கும்பலால் சிலர் அடித்துக் கொலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்திருந்தார்.
நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அலிகான் கருத்துகளை பதிவிட்டுள்ளதாக கூறி பாஜக இளைஞர் அணி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், வழக்குப்பதிவு செய்த ஹரியாணா போலீஸார் அலிகானை கைது செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இரியாணா மாநில துணை ஏசிபி அஜீத் சிங், “அலிகான் மஹ்முதாபாத் டெல்லியில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். தற்போது அரியாணாவில் உள்ள ராய் காவல் நிலைய சிறையில் உள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அவர் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ” என்றார்.
இதற்கிடையை, ஆபரேஷன் சிந்தூர் பதிவுகள் தொடர்பாக மகளிர் ஆணையமும் அலிகானுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இருப்பினும் அவர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதுகுறித்து அரியாணா மாநில மகளிர் ஆணைய தலைவர் ரேணு பாட்டியா கூறுகையில், “ பாகிஸ்தானுக்கு எதிராக தீரத்துடன் போராடிய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் குறித்து பேராசிரியர் அலிகான் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதற்கு, அவர் மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராகி பகிரங்க மன்னிப்பு கோருவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்த சர்ச்சை தொடர்பாக அசோகா பல்கலை வெளியிட்டுள்ள விளக்கத்தில், பேராசிரியர் அலிகான் கருத்து அவரது சொந்த கருத்து. அதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய ராணுவத்தின் தீரத்தை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]