சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், அந்த வழியாக வந்த கார் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சென்னை திருவான்மியூர் ஓஎம்ஆர் சாலையில், டைட்டல் பார்க் சிக்னல் அருகே திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில், அந்த வழியாக வந்த கார் சிக்கி, கவிழ்ந்தது. சம்பவத்தன்று, சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி வந்துகொண்டிருந்த கார் தரமணி டைட்டல் பார்க் சிக்னல் அருகே சென்றபோது, திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளே விழுந்தது.
இதை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காரில் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்களுக்கு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. அனைவரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தின் காரணமாக 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து, பள்ளத்தில் விழுந்த காரை கிரேன் மூலம் போராடி மேலே எடுத்தனர்.
பாதாள சாக்கடை கால்வாய் கீழே செல்வதால் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தரமணி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனிடைய சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கும் மெட்ரோ ரயில் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.