சென்னை: ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 20ந்தேதி வரை மழை தொடரும் என்றும் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வந்த வேளையில், திடீரென மாநிலம் முழுவதும் பலத்த சூறை காற்றுடன் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையானது கோடை வெப்பத்தை சற்று தணித்துள்ளால், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையிலும், கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று (மே 17) மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது.
அதுபோல, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்துார், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், கடலுார் மாவட்டம் பெலாந்துறையில், தலா 7 செ.மீ., மழையும், திருவண்ணாமலை போரூர், வேலுார் மாவட்டம் விரிஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி., அணை, திருப்பத்துார் மாவட்டம் வடபுதுப்பட்டில் தலா 6 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலுார், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கடலுார், கோவை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யும். குறிப்பாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், கோவை, சேலம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 22ம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். தமிழகத்தில் மே 20ம் தேதி வரை மழை தொடரும்.
கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி,தருமபுரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை காலம் முன்கூட்டியே தொடங்கி உள்ளதால், இந்த ஆண்டு கோடை வெப்பம் முடிவுக்கு வந்து மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசு மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள கூறி வந்த நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் மழை பெய்து வருவது மக்களிடையே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.