சென்னை; தமிழ்நாட்டின் வேங்கைவயல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுபோலவே மற்றொரு சம்பவம் திருப்பூர் அருகே அரங்கேறி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு பகுதி கவுண்ட நாயக்கன்பாளையம். இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில், 1750 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சம்பவத்தன்று, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வழங்கப்பட்ட நீரில் மலம் நாற்றம் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியை அடைந்த நிலையில், குறிப்பிட்ட நீர்த்தேக்க தொட்டியின் மேலிருந்து 2 பேர் கீழே இறங்கி வருவதை அந்த பகுதி மக்கள் சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது. அவர்களை பிடித்து விசாரிக்க சிலர் முயன்ற நிலையில், அவர்கள் மதுபோதையில் இருந்ததுடன், தப்பியோட முயன்றனர். இருந்தாலும் அந்த பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்.
மேலும் அவர்களை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் இருவரும் தண்ணீயடிக்க குடிநீர் மேல்நிலை தொட்டி மேல் ஏறியதாக தெரிவித்தனர். மேலும், விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர்கள், அருகே உள்ள பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 19), சஞ்சய் (22) என்பதும் இவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி மது அருந்தியதுடன், தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தண்ணீர் தொட்டியில் சிறுநீர் மலம் கழித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நிஷாந்த, சஞ்சய் ஆகியோர்மீது போலீசார் திருட்டு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடிநீரை வெளியேற்றி விட்டு, குடிநீர் தொட்டியை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் அமைதிப்படுத்தி, மேல்நிலை தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அமைதி அடைந்தனர். மேலும் அரசு, குடிநீர் தொட்டி அருகே யாரும் செல்லாமல் இருக்க காவலாளி நியமிக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் கோவை, திருப்பூர் பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, குடிநீர் தொட்டியில், மலம் கலந்த வேங்கைவயல் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுபோன்ற சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.