அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மே 7ம் தேதி இரவு இந்தியாவின் முப்படையினரும் கூட்டாக மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 9 முகாம்கள் அழிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் மண்ணில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக மே 8 முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது.

இந்த தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்த நிலையில் பாகிஸ்தான் மேற்கொண்ட தொடர் தாக்குதலால் வடமாநிலங்கள் மட்டுமன்றி தலைநகர் டெல்லியிலும் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

இதனால் டெல்லியிலும் வீடுகளை விட்டு வெளியேற அச்சமடைந்த மக்கள் இரவு நேரத்தில் வெளியில் தலைகாட்ட பயந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு முழுவதும் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளும் பொது அறிவுடனும் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டதாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]