சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த ஒரு பேருந்தில் பயணித்து ஆய்வு செய்தார்.
சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் 214 புதிய பேருந்துகளின் சேவையை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். அவருடன் துறை அமைச்சர் சிவசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து ஒரு பேருந்தில், முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அதிகாரிகள் பயணம் மேற்கொண்டனர். அப்போது பேருந்தில் இருந்த பயணிகளிடம் முதல்வர் ஸ்டாலின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார். அதற்கு பயணிகள் மகிழ்ச்சியின் தங்களது இலவச பயணத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய அரசு போக்குவரத்து கழகங்கள், மாநில விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு தேவைக்கேற்ப புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. அதன்படிஇ, 21,068 பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக உலக வங்கி, ஜெர்மனியில் கே.எஃப்.டபிள்யூ வங்கி உள்ளிட்டவற்றின் நிதி பயன்படுத்தி கொள்ளப்படும். ஏப்ரல் மாத நிலவரப்படி மாநில போக்குவரத்து கழகங்களுக்கு 3,778 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. மார்ச் 2026க்குள் புதிதாக 3,468 பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான், 214 புதிய பேருந்துகள் இன்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளின் இயக்கத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து, அந்த பேருந்தில் பயணித்து, பேருந்தில் இருக்கும் வசதிகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

ஏற்கனவே ஐ.ஆர்.டி எனப்படும் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் கோரியுள்ளது. மொத்தம் 2,134 டீசல் பேருந்துகள் வாங்கவுள்ளனர். ஐ.ஆர்.டி சார்பில் மூன்று விதமான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றில் 260 தாழ்தள பேருந்துகள், 887 நகரப் பேருந்துகள், 997 புறநகர் பேருந்துகள் அடங்கும். நகர மற்றும் புறநகர் பேருந்துகளை பொறுத்தவரை தரைதளத்தில் இருந்து 1,000 முதல் 1,150 மில்லிமீட்டர் வரை உயரம் கொண்டது. SETC எனப்படும் மாநில விரைவு போக்குவரத்து கழகத்தில் 110 புறநகர் பேருந்துகள், 10 ஏசி புறநகர் பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.