சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலை கிரிவலத்துக்கு பக்தர்கள் குவிவார்கள் என்பவதால், அவர்களின் வசதிக்காக  5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

மே 11ந்தேதி அன்று சித்ரா பவுர்ணமி வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து சிவபெருமான் அண்ணாமலையாக குடியிருக்கும் திருவண்ணாமலைக்கு பல லட்சம் பேர் வந்து கிரிவலம் செல்வார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளையும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்குவதாக அறிவித்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வரும் 11, 12, ம் தேதிகளில் வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் 5,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 11-ம் தேதி 1,156 பேருந்துகளும், 12-ம் தேதி 966 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 11-ம் தேதி 150 பேருந்துகளும்,

கோயம்பேட்டில் இருந்து 12-ம் தேதி 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதுதவிர, பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 11-ம் தேதி 1,940 சிறப்பு பேருந்துகளும், 12-ம் தேதி 1,530 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் 40 சொகுசு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, துாத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மே 11-ம் தேதி சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான நேரம் அறிவிப்பு…

சித்ரா பவுர்ணமி: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…