கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, வரும் 15ந்தேதி நடைபெறும் விசாரணைக்கு குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணம் தற்கொலை என்றும் கொலை என்றும் தொடக்கத்தில் தகவல்கள் பரவின. இதையடுத்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது.
இந்த வன்முறையின்போது குறிப்பிட்ட சமூக அமைப்பினர், அந்த தனியார் பள்ளியின் பேருந்துகளை எரித்து நாசமாக்கியதுடன், பள்ளி கட்டிடத்தையும் உடைத்து, அதனுள்ளும் தீ வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கலவரம் தொடர்பாக இறந்த மாணவியின் தாய் செல்வி, விசிக கடலூர் மாவட்ட செயலாளர் திராவிடமணி உள்பட 615 பேர் மீது கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு முதல் முறையாக மே 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 615 பேரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிதுறை நடுவர் எண்-2ல் ஆஜராக நீதிபதி ரீனா உத்தரவிட்டுள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக ஒரு வழக்கில் ஒரே நேரத்தில் 615 பேர், மே 15ம் தேதி ஆஜராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.