சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில்,  சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்பட பல்வேறு ஊழல் வழக்குகள், பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என பல இடங்களில் அவ்வப்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இன்று  சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பில்ரோத் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டிலும், சென்னை சாலிகிராமத்தில் பாண்டியன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று விருகம்பாக்கத்தில் முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அதிகாரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சோதனை நடைபெறுவதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளன.

இதற்கு முன்னதாக, 2021 ஆம் ஆண்டு பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறையின் சோதனை நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.